ஆக்சன், சென்டிமென்ட். திரில்லர் என்று எல்லாம் கலந்து செம ஸ்பீடாக போகும் படம் தான் ஜானி என்று தெரிவித்துள்ளார் நடிகர் பிரசாந்த்.

அறிமுக இயக்குனர் வெற்றிச் செல்வன் இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ள திரைப்படம்தான் ஜானி. இப்படத்தின் டீசரை இயக்குனர் பிரபல இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டார்.

பிரசாந்த், சஞ்சிதா ஷெட்டி, ஆனந்த்ராஜ், பிரபு, சயாஜி ஷிண்டே, கலைராணி, தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜானி பட டீசர் நொடிக்கு நொடி பரபரப்பைத் தூண்டும் வகையில் அதிரி புதிரி ஆக்சனுடன் அமைந்துள்ளது. இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது.

சிலரை எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் அவர்கள் அப்படியே இளமைத் தோற்றத்துடன் இருப்பார். இவர்களுக்கு வயசே ஆகாதா என்று என்னத் தோன்றும். அந்த வகையில் பிரசாந்த் எப்படி திரைப்படத்தில் அறிமுகம் ஆனாரோ அதே போல்தான் இன்றும் உள்ளார். அவர் ஜானி படம் பற்றி கூறியதாவது:

என்னுடைய படங்கள் அனைத்தும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கதைகளை கவனமாக தேர்ந்தெடுக்கிறேன். அது ரசிகர்களும் நன்றாக தெரியும். ஆணழகன், ஜுன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், வின்னர், பொன்னர் சங்கர் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் வித்தியாசமாக இருந்தது.

அதேபோல்தான் இந்த ஜானி படமும் ரசிகர்களை வெகுவாக கவரும். ஆக்சன், சென்டிமென்ட், திரில்லர் என்று கலவையாக ரசிகர்களை கட்டிப் போடும். படம் செம ஸ்பீடாக செல்லும். இது ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் என்னுடைய ஷாக் படம் 2004ல் வெளியானது. இந்த படம் பேய் படங்களுக்கு ஒரு டிரெண்ட் செட்டராக அமைந்தது. அதிலும் செம ஸ்டைலிஸாக அந்த படத்தை எடுத்து இருந்தோம்.

அதேபோல் தான் இந்த ஜானி படமும் ஸ்டைலிஸாக அமைந்துள்ளது. இந்த படத்தின் கதைக்கு ரஜினியின் ஜானி படத் தலைப்புதான் சரியாக இருக்கும் என்பதால் முறைப்படி அனுமதி பெற்று இந்த டைட்டிலை வைத்தோம். படத்தை பார்க்கும் போது தலைப்பிற்கான காரணம் அனைவருக்கும் புரியும்.

என்னோட இளமைக்கு என்ன காரணம் என்று எல்லோரும் கேட்கிறார்கள். இது மரபிலேயே வருவதுதான். இதற்கு என் அப்பா தியாகராஜனைதான் கேட்க வேண்டும். மனதில் உற்சாகம் இருந்து கொண்டே இருந்தால் எப்போதும் இளமையாகவே இருக்கலாம். நான் இப்படி இளமையாக இருக்க முக்கியமாக ரசிகர்களின் அன்பும், ஆதரவும்தான் முக்கிய காரணம்.

இன்றைய சூழலில் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. ஆனால் எனக்கு என் அப்பாவின் துணை மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அப்பாவே தயாரிக்கிறார் என்பதால் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தரமுடிகிறது. இதனால் கதையில் எவ்வித சமரசமும் வைத்துக் கொள்ளாமல் அப்படியே படமாக்குவதால் ரசிகர்களை கவர முடிகிறது.

இணையத்தின் வளர்ச்சிக்கு பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து விட்டது. டி20 மேட்சை விட 10-10 மேட்ச்தான் இனி அனைவருக்கும் எதிர்பார்ப்பாக இருக்கும். அந்தளவிற்கு ரசிகர்கள் விறுவிறுப்பை எதிர்பார்க்கிறார்கள். அதற்கேற்ப கதை தயார் செய்ய வேண்டிய நிலை உள்ளது. கடைக்குட்டி சிங்கம் படம் பார்த்தேன். ரொம்ப பிடித்திருந்தது. சிம்பிளான கதையை எமோஷனல் மற்றும் காமெடி சேர்த்து அனைவரும் ரசிக்கும்படி எடுத்து இருந்தார்கள்.

தற்போது ஹீரோக்களின் மார்க்கெட் நிலவரம் என்பது கடைசியாக கொடுக்கும் ஹிட்தான். முன்பு 1950களில் ஒரு ஹிட் கொடுத்தால் அது 100 ஆண்டுகள் வரை பேசப்படும். இப்போது குறைந்து கொண்டே வந்துவிட்டது. 90களில் ஒரு ஹிட் கொடுத்தால் 10 ஆண்டுகள்தான் தாங்கும் என்ற நிலை உருவாகி விட்டது. இப்போது நாம் கொடுக்கும் படங்களின் வெற்றியே நமக்கான இடத்தை தீர்மானம் செய்கிறது.

பைரசி உட்பட பல்வேறு பிரச்னைகள்தான் வெற்றி படங்கள் குறைய முக்கிய காரணம். சமூக வலைதளங்களில் ஆர்வம் இருந்தாலும் எந்நேரமும் அதிலேயே இருக்க விரும்பவில்லை. அந்த மாயைக்குள் சிக்கிக் கொள்ள விருப்பமும் எனக்கு இல்லை. இப்போது காதல் படங்களின் வரத்து குறைந்து விட்டது. இப்போது மிக வேகமாக காதலிக்கிறார்கள். அதனால்தான் படத்திலும் கூட நின்று நிதானித்து காதலிக்க முடியவதில்லை.

ஜானி படத்தில் எல்லோருக்குமே சமமான கதாபாத்திரம் உள்ளது. மிகச்சரியாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மன நிறைவோடு செல்வார்கள். இவ்வாறு பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here