சென்னை:
உடல் பருமனாக இருக்கிறாய் என்று காரணம் கூறி தன் கணவரால் உதாசீனப்படுத்தப்பட்ட பெண் இன்று பாடி பில்டிங்கில் மிஸ் வேர்ல்டு பட்டத்தை ஜெயித்து அனைவரையும் வியந்து பார்க்க வைத்துள்ளார். இதற்கு பின்னால் அவரது ஐந்து மாத கடும் உழைப்பு உள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

உடல் பருமனால் தன் கணவனாலயே உதாசீனப்படுத்தப்பட்டவர்தான் ரூபி குளோரி. இன்று மாநிலங்கள் கடந்து பாடி பில்டிங்கில் பல தங்கப்பதக்கங்களைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்த ரூபி சில வருடங்களுக்கு முன்பு உடல் பருமனின் காரணமாக சில இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இதையடுத்து அவர் எடையை குறைப்பதற்காக தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொண்டார். உழைப்பு என்றும் யாரையும் கைவிட்டதில்லையே. அதன்படி அவரது கடும் உழைப்பால் அவருடைய எடையும் குறைந்துள்ளது.

அதனால் மிகுந்த உற்சாகம் அடைந்த ரூபியின் பார்வை பாடி பில்டிங்கின் பக்கம் திரும்பியது. இதில் தனது சிறப்பான செயல்பாடுகளால் தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பதங்களை வென்று குவித்தார் ரூபி.

தற்போது டில்லியில் உலகளாவிய ‘நேச்சுரல் பாடிபில்டிங் யூனியன் இன்டர்நேஷனல்’  நடத்திய போட்டியில் கலந்து கொண்டு ‘மிஸ் வேர்ல்டு’ பட்டத்தை அட்டகாசமாக வென்றுள்ளார். இவரது வெற்றிக்கு பின்னணியில் கடும் உழைப்பு மறைந்துள்ளது.

இதுகுறித்து அவருடைய கோச் கார்த்திக் கூறியிருப்பதாவது: என்னிடம் நிறைய பேர் ட்ரெய்னிங் எடுக்க வந்துட்டுதான் இருக்காங்க. ஆனா ரூபி மாதிரி ஒரு ஸ்டூடண்ட்டை இதுவரைக்கும் நான் பார்க்கவில்லை. ரூபியை நான் 2 வருஷத்துக்கும் மேல ட்ரெய்ன் பண்றேன்.

பயங்கர டெடிகேட்டானவங்க. ஒரு நாள் கூட அவங்க ட்ரெய்னிங், டயட் லிஸ்ட்டை விலக்கியதில்லை. முதல் முறையா பயிற்சி எடுக்க வர்றப்ப 79 கிலோ, இப்ப 24 கிலோ குறைச்சிட்டாங்க. காலை, மாலைனு ரெண்டு நேரமும் 2 மணிநேரம் பயிற்சி… பயிற்சிதான்.

இந்த பயிற்சிக்காக தான் பார்த்த டீச்சர் வேலையை விட்டு முழு நேர ஜிம் பயிற்சியாளரா சேர்ந்து, மத்தவங்களுக்குப் பயிற்சி கொடுத்துட்டே அவங்களும் பயிற்சி எடுத்துக்குறாங்க. 17 நாடுகள் கலந்துகிட்ட பாடி பில்டிங் போட்டியில் ரூபி ‘மிஸ் வேர்ல்டு’ பட்டத்தை ஜெயிச்சுருக்காங்க. இந்த சாதனை பார்ப்பவர்களுக்கு ஈஸியா தெரியலாம். ஆனா இதுக்காக அவங்க 5 மாசம் கடுமையா உழைச்சிருக்காங்க”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here